ஜனநாயகத்தை அழிக்கும் 22 ஆவது திருத்தம்: அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இன்றைய தினத்தை நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் எனக் குறிப்பிட முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும், சட்டவாக்க மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரத்தினாலோ அல்லது சட்டவாக்க மன்றத்தினாலோ தவறு இழைக்கப்படும்போது பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறக் கூடிய சூழல் முன்னர் இருந்தது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளால் மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்வது குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் ஜனநாயகம் முற்றாக அழிக்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனது சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தை அரசியல்மயமாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
இந்த 22 ஆவது திருத்தத்திற்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொறியியலாளர்கள் மற்றும் பெருமளவிலான தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தில் உள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் மட்டுமே இத்திருத்தத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிநாட்டுத் தூதர்களும் காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் இத்திருத்தத்தின் ஆபத்தான தன்மையைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த மக்கள் போராட்டங்களை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்ட பொதுச்செயலாளர், நாடாளுமன்றத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய போராட்டம் முற்றிலும் ஜனநாயக வழியிலானது என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதற்கோ ஐக்கிய மக்கள் சக்தி செல்லவில்லை எனவும், ஒழுக்கமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் சட்டவிரோதமாகச் செயல்படாது என்றும் தெரிவித்தார். அதேவேளை, கடந்த காலத்தில் ஜே.வி.பி நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீச்சு நடத்தியதையும் தீ வைக்க முயன்றதையும் நினைவுகூர்ந்த அவர், நாடாளுமன்றத்தை உருவாக்கியதும் அதன் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் தங்களது கட்சியே எனக் கூறினார்.
தற்போது கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்புச் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகளுக்குள் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஊடுருவி அரசியலைப் புகுத்த முயற்சித்து வருவதாகச் சாடிய அவர், நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் சீர்குலைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயகப் போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

