எரிபொருள் மாபியாவுக்கு அடிபணிந்து சூரிய சக்தியை அழிக்க அரசு சூழ்ச்சி: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

தற்போதைய அரசாங்கம் எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களின் கமிஷன்களுக்கு அடிபணிந்து, நாட்டில் சூரிய சக்தி (Solar Power) மின் உற்பத்தியை முற்றிலுமாகக் குழிதோண்டிப் புதைக்கும் கொள்கையை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

சூரிய சக்தி துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இத்துறைசார் பங்குதாரர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது 100% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பற்றிப் பேசிய போதிலும், ஆட்சியமைத்ததும் அதனைப் புறந்தள்ளிவிட்டு டீசல் மற்றும் எரிபொருள் மாபியாவின் பிடியில் வீழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மீறி, வலுச்சக்தி அமைச்சின் செயலாளர் நெட்-மீட்டரிங் மற்றும் நெட்-அக்கவுண்டிங் முறைகளை நீக்கி ‘நெட்-ப்ளஸ்’ முறையைச் செயற்படுத்துமாறு சட்டவிரோதமான ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சின் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் கூறினார்.

தோராயமாக 2,500 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டிற்கு 25 பில்லியன் ரூபா பொருளாதார பலனை உருவாக்கக்கூடிய சாத்தியமிருந்தும், அரசாங்கத்தின் தற்போதைய தவறான கொள்கையினால் இந்தத் துறை பெருமளவில் நாசமாக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பத்து இலட்சம் கூரைகளில் சூரிய சக்தி அமைக்கும் தேசிய இலக்கில் இதுவரை 150,000 கூரைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும், எஞ்சியுள்ள 850,000 கூரைகளுக்கான இலக்கை அடைய நடவடிக்கை எடுக்காமல் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை அரசாங்கம் நடுவீதியில் கைவிட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

சூரிய சக்தி திட்டங்களுக்கான அனுமதிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இத்திட்டங்களை ஊக்குவிக்க உபகரணங்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முந்தைய அரசாங்கம் ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரத்திற்கு வழங்கிய 37 ரூபாவை 27 ரூபாவாகக் குறைத்த அதே பாதையைப் பின்பற்றி, தற்போதைய அரசாங்கம் அதனை 20 ரூபாவாகக் குறைத்து இந்தத் துறையை அழித்து வருவதாகவும், டீசல் மின்சாரத்திற்கே முன்னுரிமை அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

சிறிய அளவிலான சோலார் வியாபாரங்களை நம்பியிருந்த படித்த இளைஞர்கள் அரசாங்கத்தின் இக்கொள்கையினால் நிர்க்கதியாகி உள்ளதால், நாட்டில் மூளைசாளிகளின் வெளியேற்றம் (Brain Drain) அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொய்களைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, 100% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் வகையில் சூரிய சக்தித் துறைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.