பேரினவாத பௌத்தர்களின் செயற்பாட்டுக்கு தமிழர் ஆதரவு
வடக்கில் தமிழர்களின் பூர்வீக இடத்தில் தென்னிலங்கையின் பௌத்த பேரினவாதிகளால் அத்துமீறி முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு வடக்கில் இருந்து சென்ற தமிழரால் ஆதரவு வெளிபடுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி, நீதிமன்ற உத்தரவை மீறி அரச அனுசரணையுடன் அமைக்கப்பட்ட பௌத்த விகாரையை பாதுகாக்க வேண்டுமென ராஜபக்ச ஆதரவு செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குருந்தூர் மலை விவகாரத்திற்கு தீர்வு காணக்கோரி, பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சிலரின் ஏற்பாட்டில் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இருந்து பௌத்த மதவிவகார அமைச்சுவரை முன்னெடுக்கப்பட்ட பேரணியில் யாழ். சிவில் சமூக நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அருண் சித்தார்த் பங்கேற்று தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் குறித்த விகாரைக்கு எதிரானவர்கள் அல்ல, குறிப்பிட்ட ஒரு அரசியல் நோக்கத்தோடு செயற்படும் அரசியல் குழுவின் செயற்பாடே அது. குருந்து விகாரையை பாதுகாக்க வேண்டும். அதுவொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியம். அது தேசிய மரபுரிமையாகும். அது பொதுவான ஒன்று. சிங்களத் தமிழ் என இல்லாமல் அதனை பாதுகாக்க வேண்டும். ஆகவே குறித்த அரசியல் சார்பு குழுவின் அடாவடித்தனத்தை கண்டிக்கின்றோம். நாங்கள் அவர்களுடன் இல்லை என்பதை சிங்கள மக்களுக்கு தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். குறிப்பிட்ட ஒரு சிலரே குறிப்பாக 30 ஆயிரத்திற்கும் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்களே இதில் முன்னிலையாகின்றனர். அவர்களின் அரசியல் பிழைப்பும் அதுவே. அவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்காக எதையும் செய்யாதவர்கள். அவர்கள் எப்போதும் இனவாதம், மதவாதம் மற்றும் குலவாதத்தின் ஊடாக அரசியல் செய்வதர்கள். என்றார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமானப் பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது.
மேலும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 632 ஏக்கர் காணிகளுக்குள் எல்லைக் கற்கள் இடப்பட்டு விவசாயக் காணிகளை அபகரிக்கும் ஒரு முயற்சியும் இடம்பெற்றுள்ளதோடு, இதற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இந்த சர்ச்சை நீள்கின்ற நிலையில், குருந்தூர் மலை விவகாரத்திற்கு தீர்வு காணக்கோரி, பௌத்த தேரர்கள் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பேரணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.