பங்குச் சந்தை மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை: “இறுதியில் நீதியும் உண்மையும் வென்றது” என கருத்து
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ஆஸ்திரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி குற்றமிழைத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பிலவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இத் தீர்ப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, போலியான அதிகாரப் பத்திரத்தைப் (Power of Attorney) பயன்படுத்தி பங்குகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கிலிருந்தும் தாம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரே சம்பவத்தை இரண்டாகப் பிரித்து, தம்மை அரசியல் ரீதியாக அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலேயே இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் முதலாவது வழக்கிலிருந்து 2025 மார்ச் 23 அன்றும், இரண்டாவது வழக்கிலிருந்து தற்போதும் தாம் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், தமக்கு எவ்வித அரசியல் பதவிகளும் இல்லாத சூழலில் இந்த இரு வழக்குகளிலிருந்தும் விடுதலையடைய முடிந்தது குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தமக்கு எதிராகப் பிரசாரங்களை மேற்கொண்டவர்களுக்கு மத்தியில் இறுதியில் நீதியும் உண்மையும் வென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
‘தர்மத்தின் வழியில் நடப்பவனை தர்மமே காக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப உண்மை வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
தனது 27 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நிதி முறைகேடுகளோ அல்லது குற்றச் செயல்களோ தொடர்பில் எதிரிகள் கூடப் பழிசுமத்தியதில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமக்கு எதிராகப் முறைப்பாடு செய்வதற்கு இலங்கையில் எவரையும் கண்டுபிடிக்க முடியாமலேயே, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து முறைப்பாடு செய்ய எதிரிகள் நடவடிக்கை எடுத்ததாகக் குற்றம் சாட்டினார்.
அத்துடன், வழக்குத் தொடுத்தவர் நீதிமன்றத்திலேயே பொய் சாட்சியமளித்ததை ஒப்புக்கொண்டதாகவும், நீதிபதியால் வழங்கப்பட்ட 283 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் முறைப்பாட்டாளரின் பொய் தன்மைகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முறைப்பாட்டாளர் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்ட பின்னரும் கூட அரசாங்கம் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்ததாகச் சாடிய அவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் தமக்காக இலவசமாக ஆஜராகிப் போராடியமையினாலேயே தமக்கு நீதி கிடைத்ததாகவும், இல்லையெனில் 23 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்காகத் தனது சட்டத்தரணிகள் குழுவிற்கும், நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்த நீதிபதிக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அரசியல் பழிவாங்கல் வழக்கினால் தாம் 11 ஆண்டுகள் வேதனையை அனுபவித்ததாகவும், 13 நாட்கள் விளக்கமறியலில் இருக்க நேரிட்டதாகவும் வேதனை வெளியிட்ட உதய கம்மன்பில, பொய் வழக்குகளின் மூலம் தமக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள் ஈடுசெய்ய முடியாதவை என்றும் கூறினார்.
மேலும், அரசியல்வாதிகள், பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து சட்டத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்தும் வகையில் ‘எனது முறைப்பாடு’ (Mage Avanaduwa) என்ற தலைப்பில் விரைவில் புத்தகமொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் இறுதியாகத் தெரிவித்தார்.

