காணாமல்போனோர் வழக்கு: கொழும்பு நீதிமன்றில் சாட்சியமளிக்க முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ஷ..!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல்போனமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செப்டம்பர் 29) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரிவொன்றாகச் செயற்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகப் கடமையாற்றியிருந்தார்.

இதன் காரணமாக, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சாட்சியமளிக்குமாறு முதன்முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் சுட்டிக்காட்டி மின்னணு ஊடகக் காணொளி வழிகள் மூலம் முன்னிலையாக அனுமதிக்குமாறு அவரது தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அக் கோரிக்கையை ஏற்று, தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு காணொளித் தொழில்நுட்பம் (Video Link) ஊடாக இன்று சாட்சியமளிக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து, நேரலை காணொளி வாயிலாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்குத் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.