மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நிற்கின்றோம்!

புடினின் “தத்துவாசிரியர்” இவ்வாறு சொல்கின்றார்.

மேற்குடன் இறுதி மோதல் நெருங்குவதாக எச்சரிப்பு.

நாட்டைவிட்டு ஓடும் ரஷ்யர்கள் கிரெம்ளின் அதை மறுக்கிறது.

உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்ய வாக்கெடுப்பு ஆரம்பம்.

உக்ரைன் போர் உலகப் போராக மாறுகின்றது என்று எச்சரித்திருக்கிறார் ரஷ்யாவின் பூகோள அரசியல் தத்துவாசிரியரும் அதிபர் புடினின் “குரு” என்று வர்ணிக்கப்படுபவருமாகிய அலெக்சாண்டர் டுகின் (Alexander Dugin).

போர் இரண்டு விளைவுகளை ஏற்படுத்தலாம். அதில் ஒன்று அணு ஆயுதப் பேரழிவு. ரஷ்யாவுக்கும் மேற்குக் கூட்டணிக்கும் இடையே இறுதி மோதல் நெருங்குகிறது – என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய – ஆசியா மையத்தில் ஒரு பேரரசாக (EuroAsian empire) ரஷ்யாவை விஸ்தரித்து விரிவுபடுத்துகின்ற (expansionism) கொள்கையின் தத்துவாசிரியர் என்று கருதப்படுபவர் டுகின். கடந்த மாதம் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு கார்க் குண்டுத் தாக்குதலில் அவரது மகள் பலியனார் என்பது நினைவிருக்கலாம்.

அதிபர் புடின் நாட்டைப் போருக்குத் தயார்ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை வரவேற்றுள்ள ரஷ்யாவின் தீவிர தேசியவாதிகளில் அலெக்சாண்டர் டுகின் முக்கியமானவர். உக்ரைன் போர் எவ்வாறு முடிவடையலாம் என்பது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், ரஷ்யா தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் அணு ஆயுதத்தின் ஆபத்தை மறந்து செயற்படுகின்ற நிலை ஏற்படும். ஓர் அணு ஆயுதப் பேரழிவுக்கு (“nuclear apocalypse”) அது வழிகோலும் – என்று எச்சரித்திருக்கிறார்.

மொஸ்கோ அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டுகின், உக்ரைன் மீதான புடினின் படையெடுப்பை நியாயப்படுத்தி மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம், எங்களை அங்கு தள்ளுவதில் வெறித்தனமாக இருப்பது மேற்குலகம்தான். போரில்

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா என்பது ஒரு திறந்த கேள்வி, ஆனால் அணுசக்திப் பேரழிவு ஒன்றுக்கான நிகழ்தகவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது-என்று டுகின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டைப் போருக்காகப் பகுதி அளவில் அணி திரட்டும் (“partial mobilisation”) புடினின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்ய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி இளவயதினர் ரஷ்யாவிலிருந்து வெளியேறிவருகின்றனர்.

தொண்டர் படைகளாக இளைஞர்கள் போர்க் களத்துக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அயல் நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடப் பலரும் முயற்சிக்கின்றனர். சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

பின்லாந்து, ஆர்மீனியா, துருக்கி போன்ற ரஷ்யர்கள் வீஸா இன்றிப் பயணிக்கக் கூடிய நாடுகளுக்குச் செல்லப் பலரும் முண்டியடிக்கின்றனர். பின்லாந்து எல்லையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மொஸ்கோவில் இருந்து செல்லும் விமானங்களின் பயணச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பெருமளவானோர் நாட்டை விட்டு ஓடுவதாக வரும் செய்திகளை கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது.

இதற்கிடையில் உக்ரைனை ரஷ்யாவோடு இணைத்துக் கொள்வதற்கான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நான்கு பிராந்தியங்களில் ஆரம்பமாகியுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவான குழுக்கள் வாக்கெடுப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள

லுஹான்ஸ்க்(Luhansk) கெர்சன்,(Kherson) ஷெபோரிஜ்ஜியா (Zaporizhzhya) மற்றும் டொனெஸ்க் (Donetsk) ஆகிய நான்கு பிராந்தியங்களிலேயே சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மொஸ்கோ வாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது.