செப்டம்பர் 14 முதல் உள்ளாட்சி வாரம்: பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசு ஆயத்தம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

“வளமிக்க நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” என்ற பெயரில் செப்டம்பர் 14 முதல் 19 வரை நாடு தழுவிய அளவில் உள்ளாட்சி வாரத்தை நடத்த அரசு தீர்மானித்துள்ளது குறித்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன விளக்கமளித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பகுதியை மையமாகக் கொண்டு இதன் பிரதான தேசிய விழா நடைபெறவுள்ளதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகளிலும் உள்ளாட்சி மன்றங்கள் ஊடாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த ஆறு நாள் கொண்டாட்டத்தின் முதல் நாளான செப்டம்பர் 14 அன்று நடமாடும் சேவை மற்றும் வருவாய் மேம்பாட்டு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுமக்கள் செயலகங்களை நாடி வருவதைத் தவிர்த்து, அதிகாரிகளே மக்களைத் தேடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவர்.
தொடர்ந்து செப்டம்பர் 15 அன்று பொதுப் பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, உள்ளூர் உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரித்தல் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்தும் பணிகள் இடம்பெறும்.
செப்டம்பர் 16 அன்று சுற்றுச்சூழல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நாளாக அறிவிக்கப்பட்டு, “நாளைக்காக ஒரு கன்று” என்ற திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மரக்கன்றுகள் நடும் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
செப்டம்பர் 17 அன்று சுகாதாரம், தூய்மை மற்றும் டெங்கு ஒழிப்பு நாளாகக் குறிப்பிடப்பட்டு, வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு பரவலைத் தடுக்கும் வகையிலும், பொது சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து செப்டம்பர் 18 அன்று இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு, இலக்கிய நயங்களை ஊக்குவித்தல், மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோருக்கான கண்காட்சிகள் நடத்தப்படும்.
இறுதியாக செப்டம்பர் 19 அன்று நடைபெறும் நிறைவு விழாவில், சிறப்பான சேவையாற்றிய அரச அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ. 24 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இதனைச் செயல்படுத்துகின்றன.
எனவே, பொதுமக்கள் தங்களது உள்ளாட்சி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், இத்திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

