எனது மக்களின் குரலை ஒலிக்க இராஜபக்ச மேடையிலும் ஏறுவேன்: பாராளுமன்றத்தில் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா உரை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எந்த அரசியல் மேடையும் தடையல்ல என்றும், வடபகுதி மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக்கொணரவே தாம் பல்வேறு மேடைகளில் பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மேடையில் தாம் ஏறவுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரணில் விக்ரமசிங்க அழைத்தாலும் அல்லது எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச அழைத்தாலும் அவர்களது மேடைகளுக்கும் சென்று உரையாற்றுவேன் எனத் தெரிவித்தார்.
இது தனிப்பட்ட அரசியலல்ல எனவும், வடக்கில் எதிர்த்தரப்பினரால் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து உண்மை நிலையை உரக்கச் சொல்வதற்கே தாம் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
“நான் வெவ்வேறு மேடைகளில் ஏறுவது எனது மக்களுக்காகவே தவிர தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல” எனத் தெரிவித்த அவர், பொது எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் கூறினார்.
அதேவேளை, நாமல் ராஜபக்ஷ உட்பட எவராயினும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கோ அல்லது தனிப்பட்ட விடயங்களுக்கோ தாம் ஒருபோதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது உரையின் போது அவைத் தலைவரால் நேரக் கட்டுப்பாடு மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தாம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக அவர்களின் குரலைத் தொடர்ந்து ஒலிப்பேன் என அர்ச்சுனா எம்.பி. உறுதியளித்தார்.

