அமெரிக்க இராஜதந்திரி சின்டி மெக்கெய்ன்யுடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கும் உடனிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன்  ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில்  தங்கியிருக்கவுள்ளார்.

இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் உணவு உதவித் திட்டங்களை வெளிப்படுத்தவும்  இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் இலங்கையுடனான நீடித்த பங்காண்மை ஆகியவற்றினை மீளவலியுறுத்துவதற்காகவும் முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்னின் விஜயம் அமைந்துள்ளது.

கொழும்பிலுள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதற்கு மேலதிகமாக, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு விஜயம் செய்து அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்கள் ஊடாக நிவாரணம் பெற்றவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துபவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வார்.

இந்நிலையிலேயே ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சின்டி மெக்கெய்ன், நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.