திமுக எம்.பி ஆ.ராசா க்கு மிரட்டல்: பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது.

திமுக எம்.பி ஆ.ராசா க்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அதில், பீளமேடு புதூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் வகையில் பேசினார்.

பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த மிரட்டல் விடுக்கும் அவதூறான பேச்சுக்கு திமுக, திக, தபெதிக உள்ளிட்ட பல்வேறு திராவிட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வர், தந்தை பெரியார், ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோர் குறித்து பேசி, மிரட்டல் விடுத்த அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபெதிகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.