“வறுமையை ஒழிக்க வந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வறுமையே அதிகரித்துள்ளது” – முன்னாள் எம்.பி ஜெகத் குமார சாடல்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் அரச ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் கூட இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு ஒரு ‘தேவதைக் கதைகள்’ அடங்கிய புத்தகத்தையே வழங்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அந்தப் புத்தகத்தில் வளமான நாடு, அழகான வாழ்க்கை போன்ற மிக அழகான கனவுகள் இருந்ததாகவும், அத்தகைய பொன்னான நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் உயரிய நிலையை அடைந்து நாடு பெரும் அபிவிருத்தியைக் காணும் என்றே கூறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அரச ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக 20 கிலோ அரிசியைக் கடனாகப் பெற வேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியுள்ளதாகவும், அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கி அவர்களின் சேவையை அரசாங்கம் சிறுமைப்படுத்துவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

நாட்டின் 80 வீதமான அரச ஊழியர்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்த நிலையில், அவ்வாறான அரச ஊழியர்களை இவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அவர்களுக்குத் தேவை பிச்சை எடுக்கும் வகையிலான கொடுப்பனவுகளோ அல்லது கடன்களோ அல்ல, மாறாக தங்களது சேவைக்கான மரியாதையும் முறையான சம்பள உயர்வும் ஆகும் என்றும் வலியுறுத்தினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்படும் என அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதே சம்பள உயர்வு பற்றிப் பேசப்படுவதால், இந்த ஜூலை மாதத்தில் இருந்தாவது அரச ஊழியர்களின் சம்பளத்தை ஆகக்குறைந்தது 15,000 ரூபாவினாலாவது உயர்த்துமாறு வலியுறுத்தினார். திறைசேரி நிரம்பி வழியும் அளவிற்கு பணம் இருப்பதாக அரசாங்கம் கூறுமாயின், அதனை மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நெல் கிலோவொன்றை 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகக் கூறி, விவசாயிகளை கோமணம் அணிவித்து கொழும்புக்கு வரவழைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இன்று விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசி வருவதாகக் கண்டித்த ஜெகத் குமார, அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியில் இருந்து கூறிய வாக்குறுதிகள் இன்று அவர்களுக்கே பாரிய எதிரொலியாக மாறியுள்ளன என்றார்.

தங்களது அரசாங்கக் காலத்தில் கொவிட் பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓரளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் விளைச்சலைத் தகுந்த விலைக்குக் கொள்வனவு செய்து அவர்களுக்குப் பலம் சேர்த்ததாக நினைவுகூர்ந்தார். திறைசேரி நிரம்பிய வழிகிறது என்றால், விவசாயிகளிடம் 150 ரூபாவிற்கு நெல்லைக் கொள்வனவு செய்து, ஏழை மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமே தவிர, மக்களுக்கு முன்னால் விசித்திரக் கதைகளைக் கூறி விநோதம் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சவால் விடுத்தார்.

மேலும், வறுமையை ஒழிப்பதற்கான பிரதான திட்டமாக இருந்த ‘சமிருத்தி’ திட்டத்தை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்குடன் கைவிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தற்போது ‘அஸ்வெசும’ திட்டம் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாகவும், அதிலும் தகுதியற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் வறுமை அதிகரிக்கும் போது நிவாரணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும், எனவே எதிர்க்கட்சியில் இருந்தபோது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தற்போதாவது இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.