எரிபொருள் விலை குறைப்பு ஒரு ஏமாற்று வேலை; எமது எண்ணெய் அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது ஏன்? – உதய கம்மன்பில

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்று (02.07.2026) பிட்டகோட்டே பகுதியில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில, தற்போதைய அரசாங்கத்தின் எரிபொருள் விலை மாற்றம் மற்றும் உளவுத்துறை முன்னாள் முதன்மை அதிகாரி சுரேஷ் சலேயின் கடவுச்சொல் சிக்கல் குறித்துப் பல முதன்மையான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், “மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக” மிகச் சொற்ப அளவிலேயே விலையைக் குறைத்துள்ளது என்று தெரிவித்த அவர், இந்த ஏமாற்று வேலையை நாட்டுக்கு வெளிப்படுத்துவது எமது கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.

2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 72.87 டாலராகக் காணப்பட்டதாகவும், ஜூன் 29 அன்று இலங்கையில் எரிபொருள் விலை மாற்றப்பட்ட போது, அதன் விலை 72.55 டாலராகக் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், உலகச் சந்தையில் விலை குறைந்துள்ளதால் அரசாங்கத்தால் போருக்கு முந்தைய விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க முடியும் என்றார்.

போருக்கு முன் 293 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டர் ஒன்று தற்போது 20 ரூபாய் குறைக்கப்பட்டு 414 ரூபாய்க்கு விற்கப்படுவதால், அது இன்னும் 131 ரூபாயினாலும், 281 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் 25 ரூபாய் குறைக்கப்பட்டு 382 ரூபாய்க்கு விற்கப்படுவதால், அது இன்னும் 101 ரூபாயினாலும் குறைக்கப்பட வேண்டும் என்று கணக்குக் காட்டினார்.

இதேபோல் ஒக்டேன் 95 பெட்ரோல் 155 ரூபாயினாலும், சுப்பர் டீசல் 149 ரூபாயினாலும் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் இருப்பில் இருப்பதாக அரசாங்கம் கூறும் காரணம் பொய்யானது என்றார். பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கிய போது, தன்னிடம் 35 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசாங்கம், போர் தொடங்கி 12 நாட்களுக்குள் விலையை ஏற்றியதாகவும், ஆனால் இப்போது உலகச் சந்தையில் விலை குறைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்க மறுப்பது உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை வாங்கியதன் மூலம் பெறப்பட்ட இடைத்தரகுப் பண ஊழலை மறைப்பதற்கே ஆகும் என்றும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, மன்னார் படுகையில் மட்டும் 2 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், பேரல் ஒன்று 100 டாலர் என கணக்கிட்டாலும் அதன் மதிப்பு 200 பில்லியன் டாலர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அங்குள்ள 9 ட்ரில்லியன் கன அடி இயற்கை எரிவளியின் மதிப்பு 29 பில்லியன் டாலர் என்பதால், மொத்தமாக எமக்கு 229 பில்லியன் டாலர் மதிப்புடைய வளம் உள்ளதென்றும், எமது மொத்த வெளிநாட்டுக்கடன் 42 பில்லியன் டாலர் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2022 ஏப்ரலில் வெறும் 20 மில்லியன் டாலரைச் செலுத்த முடியாமல் நாடு திவாலான நிலையில், பன்னாட்டு வல்லரசுகளுக்குப் பயந்து இந்த அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். தான் எரிசக்தி அமைச்சராக இருந்த 18 மாதங்களில் இதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவை அமைத்து, 873 வரைபடக் கட்டங்களை உருவாக்கி ஏலத்திற்குத் தயாரான போதும், ஏலத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு, 2022 மார்ச் 3 அன்று தான் மர்மமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வளங்களை மீண்டும் தோண்டி எடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்ததாக, சுரேஷ் சலேயின் கடவுச்சொல் சிக்கல் குறித்துப் பேசிய அவர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரியிருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும் என்றார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி, எந்தவொரு குற்றஞ்சாட்டப்பட்டவரையும் தனக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும், அவருக்கு அமைதி காக்க உரிமை உண்டு என்றும் அவர் விளக்கமளித்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் கடவுச்சொற்களை வழங்குமாறு கட்டளையிட்டுள்ளதை நாம் மதித்தாலும், அதனுடன் உடன்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், சலேயின் சட்ட அறிஞர்கள் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வார்கள் என நம்புவதாகக் கூறினார்.

சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு 4 நியாயமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்த கம்மன்பில, முதலாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவோ அல்லது விசாரணைக்கு உதவவோ சட்டப்படி கடமைப்பட்டவர் அல்ல என்றார். இரண்டாவதாக, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சிறில் காமினி பாதிரியார் உள்ளிட்ட பலர் ஊடகங்கள் வாயிலாகச் சலேயிற்குச் சாதகமான சலுகைகளை வழங்குவதாகக் கூறி முறைக்கேடான அழுத்தங்களைச் செலுத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார். மூன்றாவதாக, 38 ஆண்டுகள் உளவுத்துறையில் இருந்த ஓர் அதிகாரியின் தொலைபேசி மற்றும் கணினியில் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முதன்மையான தகவலாளர்களின் விபரங்கள் இருக்கும் என்றும், மேகக்கணிமை (Cloud) தொழில்நுட்பம் மூலம் பழைய விபரங்கள் புதிய கருவிகளுக்கும் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால் அவை வௌியாவது அவர்களின் உயிருக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டார்.
நான்காவது காரணமாக, 2002 இல் அதுருகிரிய பகுதியில் அமைந்திருந்த இராணுவ உளவுத்துறையின் பாதுகாப்பான இல்லம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், கர்னல் துவான் முத்தலிப் உள்ளிட்ட 73 உளவு அதிகாரிகளும் தகவலாளர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகத்தை நினைவூட்டினார்.

அன்று அதற்குத் தலைமை தாங்கிய ஹமீட் நிலாம் என்ற அதிகாரி நாட்டை விட்டு வெளியேறி 24 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இலங்கை வரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய கசப்பான வரலாற்று அனுபவங்கள் உள்ளதால், நீதிமன்றக் கட்டளைக்கு இணங்கி, அதேவேளை அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய சலேயின் சட்ட அறிஞர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.