கொழும்பு கொம்பனித்தெரு முருகன் ஆலய பக்தர்களின் ஏற்பாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொசொன் பௌர்ணமி அன்னதான நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் மத நல்லிணக்கத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில், கொழும்பு 2 கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய பக்தர்களினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொசொன் பௌர்ணமி அறுசுவை சைவ சாப்பாடு அன்னதான நிகழ்வு இன்றைய தினம் மிக விமரிசையாக நடைபெற்றது.

கொம்பனித்தெரு ஸ்ரீமுருகன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பாக நடைபெற்ற இந்த உன்னத ஆன்மீக நிகழ்வை, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க தர்மகர்த்தாவான பெருமாள் பூமிநாதன் மற்றும் ஐயப்பன் குருசுவாமிமார்கள் ஆகியோர் இணைந்து பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றி இனிதே ஆரம்பித்து வைத்தனர்.

பௌத்தர்களின் புனித நாளான பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இந்து மதப் பக்தர்களினால் இந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை, இலங்கையில் பல்லின மக்களுக்கும் இடையிலான மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

இன்றைய தினம் பகல் 01.00 மணி முதல் ஆரம்பமான இந்த தமிழ் பாரம்பரிய அன்னதான நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகவும் ஆவலோடு பங்கெடுத்துக் கொண்டனர்.

இந்த அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படியான தூய அறுசுவை சைவ உணவுகள் மிகவும் தூய்மையான முறையில் பரிமாறப்பட்டன.

இதன்போது வருகை தந்த மக்களுக்கு கீரி சம்பா சோறு, பருப்பு, பொலொஸ் கறி, வெண்டிக்காய் குழம்பு, மாங்காய்க்கறி, கோவா சுண்டல், வடை, அப்பளம், பாயாசம், ரசம் மற்றும் மோர் மிளகாய் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் அன்போடு பரிமாறப்பட்டன.

கொழும்பு வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொசொன் பௌர்ணமி அன்னதான நிகழ்வினை, ஒழுங்கமைப்பாளர் சந்திரகாந்தன் பிரதீப் குமார் அவர்கள் முன்னின்று வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.