பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை அரசு
Meiveli Media Team

இலங்கையில் நீண்டகாலமாக அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான PTA சட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். புதிய சட்டம் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது இன, மத அல்லது தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இந்த சட்டமூலம் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. PTA சட்டம் பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அதை ரத்து செய்வதற்கான அரசின் இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

