ஹரக்காட்டாவிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க கைது!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக்காட்டா’ எனப்படும் நதுன் சிந்தகவிடம் இருந்து பெருந்தொகை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் அரசியல்வாதியான சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் முறையே ஹோரண மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக நம்பகமான செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நதுன் சிந்தகவை விளக்கமறியலில் வைப்பதற்கு உதவுவதாகக் கூறி, சுமார் 1,200 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாகவே இந்த இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய குரல் பதிவுகளும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட தனது மகனைப் பார்ப்பதற்காக முன்னாள் நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ, இன்றைய தினம் மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


