சுகீஸ்வர பண்டாரவிற்கு எதிரான குற்றச்சாட்டின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் சட்டத்தரணி நளின் பத்திரன
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சுகீஸ்வர பண்டார என்பவர் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறி, அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நபர் யார் என்பது தற்போது உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தகவலைத் தம்மால் முழுப் பொறுப்புடன் உறுதிப்படுத்த முடியும் என சர்வஜன பலய கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் சுகீஸ்வர பண்டாரவிற்கு எதிராக இந்த முறைப்பாட்டைச் செய்தவர் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அன்டன் பெரேரா ஆவார்.
இருப்பினும், சுகீஸ்வர பண்டாரவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள அன்டன் பெரேரா என்ற நபருக்கு எதிராகவே தற்போது மூன்று பாரிய குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார். அவர் ஒரே நேரத்தில் கால்நடை வளங்கள் அமைச்சின் முதன்மை கணக்காளராகவும், ஆஸ்திரேலியா நன்னீர் பால் மாடு திட்டத்தின் கணக்காளராகவும், ஊழல் ஒழிப்பு செயலகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி, அந்த மூன்று பதவிகளுக்குரிய சம்பளங்களையும் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு சம்பளம் பெற்றதாகக் கூறி ஒருவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்க முடியுமென்றால், ஒரே நேரத்தில் மூன்று பதவிகளை வகித்து மூன்று சம்பளங்களைப் பெற்ற இந்த நபருக்கு எதிராகவும் அதே சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நளின் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விரைவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுகிறதா என்பதை இனிவரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

