🚨 ஹெரோயின் வாங்க வந்த 18 பேர் கைது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பல்வேறு பகுதிகளில் இருந்து ஹெரோயின் வாங்குவதற்காக பண்டாரவளைக்கு வந்த 18 இளைஞர்களை கைது செய்ய பண்டாரவளை பொலிஸாருக்கு முடிந்துள்ளது.
ஹெரோயின் விற்பனையாளர்கள், தினந்தோறும் ரகசியமாக சிறு பொதிகளாக போதைப்பொருளை தயாரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் பல்வேறு இடங்களில் மறைத்து வைப்பதுடன், பணத்தை ஈசி கேஷ் (Easy Cash) சேவையின் மூலம் பெற்றுக்கொண்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, நேற்று ஹெரோயின் விற்பனைக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது பண்டாரவளை நகரத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள பெத்தேகும்புர (Beddakumbura) கிராமம் ஆகும்.
அந்த கிராமத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகளை பெற்றுக்கொண்டிருந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை, பதுளை, ஹாலிஎல, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் எல்லை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை பொலிஸ் முன்னெடுத்து வருகின்றது.

