“சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்; அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது” – பொதுஜன ஐக்கிய முன்னணி அதிரடி குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

*பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஊடக சந்திப்பு: “அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது; சுரேஷ் சாலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்”*
பொதுஜன ஐக்கிய முன்னணியின் முக்கியஸ்தர்களான ஜனக ரணவக மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோரால் இன்றைய தினம் (16) கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலே எதிர்கொண்டுள்ள விசாரணைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலேயின் பெயரைக் கேட்டாலே இந்த அரசாங்கம் நடுங்குவதாகவும், அவரைத் தரையில் அமர வைத்தே சிமெந்து தரையில் உணவு வழங்கும் அளவுக்கு பழிவாங்கும் நோக்குடன் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் ஜனக ரணவக குற்றம் சாட்டினார்.
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு புலனாய்வு அதிகாரியை இவ்வாறான மோசமான நிலைக்கு உட்படுத்துவது சட்டம் தன் கடமையைச் செய்யும் முறைமை அல்ல என தெரிவித்த அவர், ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணம், டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெருமளவிலான வீடுகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுகீஸ்வர பண்டார, சுரேஷ் சலே விவகாரத்தில் தாங்கள் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், உண்மையில் நீதிமன்றத்தை அவமதித்தது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கதான் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸ்சை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரே உண்மையாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஷானி அபேசேகர போன்ற ஒருவரிடம் புலனாய்வுப் பிரிவு தரவுகள் அடங்கிய கடவுச்சொற்களை எக்காரணம் கொண்டும் ஒப்படைக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், சுரேஷ் சாலே தற்போது உயிருக்கும் மரணத்திற்கும் இடையிலான ஒரு போராட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு சாலே பற்றிய பேச்சுகளை முற்றாக மூடிமறைப்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சிறி லியனகமனி பிதாவுக்கு இருக்கும் வேதனையை விட தங்களுக்கு அதிக வேதனை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாக்குதல் குறித்த முன்கூட்டிய புலனாய்வுத் தகவல்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்திருந்ததால் அவரால் இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் குற்றம் சாட்டினார்.
ஒட்டுமொத்த நாடும் பாரியதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு, அரசாங்கம் நாளுக்கு நாள் நாட்டை படுகுழிக்குள் தள்ளி வருவதால் தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துவிட்டது என ஊடக சந்திப்பின் நிறைவாக அவர்கள் தெரிவித்தனர்.

