திரிபோஷ சத்துணவில் அதிகளவு அப்ளொடோக்சின்’ உறுதிப்படுத்தியது PHI
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அப்ளொடோக்சின் என்ற இரசாயனம் கலந்திருப்பது உண்மையே எனவும், அதனாலேயே சில மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்ட திரிபோஷ தொகுதி மீளப் பெறப்பட்டதாகவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ள நிலையில், இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபத் தலைவர் எம்.என்.எச் நிஹால் இன்று கொழும்பில் ஊடக சந்திப்பபை நடத்தி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
திரிபோஷவில் ஒருவகை நச்சுத்தன்மை காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதுத் தொடர்பில் எமது சங்கத்தின் தலைவர் வெளியிட்ட கருத்தை பொய்யான கருத்தாக உறுதிப்படுத்துவதற்கு ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. எமது நிறைவேற்று சபையின் தீர்மானத்திற்கு அமைய இந்த கருத்தானது உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். நாங்கள் எப்போதும் மக்களுக்கு சுகாதாரமான, சுத்தமான உணவினை வழங்க வேண்டிய பொறுப்பினை ஏற்றுள்ளோம். இவ்வாறான ஒரு சூழலில் எமது சங்கத்தின் தலைவரிடம் சில மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்ட திரிபோஷவை ஏன் மீளப்பெறுகின்றீர்கள் என ஊடகம் ஒன்று வினவியது, எமது சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த சந்தர்பத்தில் சில மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்ட திரிபோஷவின் மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர். ஆகவே இந்த அடிப்படையில் திரிபோஷவில் அப்ளொடோக்சின் என்ற இரசாயனம் அடங்கியிருப்பது குறித்து தலைவர் கருத்து வெளியிட்டார். அது அடிப்படையற்ற ஒரு கருத்தல்ல. பொறுப்புடனேயே இந்த கருத்தை வெளியிட்டார். நிறைவேற்று சபையின் தீர்மானத்திற்கு அமையவே இந்த தகவலை வெளியிட்டார் என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். கடந்த காலங்களில் விநியோகிக்கப்பட்ட திரிபோஷவில் மக்கள் பாவனைக்குதவாத, அதாவது உள்ளடக்கப்பட வேண்டிய அப்ளொடோக்சினின் அளவைவிட கூடுதலாக உள்ளடக்கப்பட்ட திரிபோஷவே விநியோகிக்கப்பட்டது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம். என்றார்.
திரிபோஷ சத்துணவில் அதிகளவு அப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் எனவும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்ததார்.
எனினும் இந்த கருத்தை இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபத் தலைவர் எம்.என்.எச் நிஹால் இன்று மறுத்துள்ளார்.