சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு, தேர்தலை நடத்தலாம்: சட்டமா அதிபர் தெரிவிப்பு
Meiveli Media Team

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையை அடிப்படையாகக் கொண்டுஇ தேர்தலை நடத்துவதற்கான சட்ட வாய்ப்புகள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் விசேட செயற்குழு, அதன் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று கூடியது. வெளிநாட்டில் இருந்த இரா. சாணக்கியன், இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். மாகாணசபைத் தேர்தலை பழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவது குறித்து ஆராயப்பட்ட நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மூன்று புதிய வாக்களிப்பு வழிமுறைகளை முன்வைத்துள்ளது.
அதன்படி, விருப்பு வாக்களித்தல், பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கான வாக்களித்தல் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான வாக்களித்தல் ஆகிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் கிராமிய மட்டத்தில் மேலும் கருத்துக் கணிப்புகளை நடத்த வேண்டும் என்ற யோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும், இதனை எதிர்த்த இரா. சாணக்கியன், மீண்டும் கருத்துக் கணிப்புகளுக்குச் செல்வது தேர்தலை மேலும் தாமதப்படுத்தக்கூடும் என்றும், பல்வேறு தரப்புகள் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளை முன்வைத்து செயல்முறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையில் உள்ள விடயங்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானவை அல்ல என்றும், சில சொற்பிரயோகத் திருத்தங்களுடன் அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புதிய வாக்களிப்பு முறைமை பொதுமக்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம் என குழு உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டங்களில் மேலும் விரிவான விளக்கங்களைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

