ஐக்கிய தேசியக் கட்சி பெண் நகராட்சிமன்ற உறுப்பினருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் போராட்டம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பெண் நகராட்சிமன்ற உறுப்பினர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிக்கு எதிராக, சிவில் அமைப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் இணைந்து பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
போராட்டப் பதாதைகளை ஏந்தியவாறு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் கூடிய போராட்டக்காரர்கள், தமக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சார பணிகளுக்காக எனக்கூறி, பல வர்த்தகர்களிடம் கோடி கணக்கான ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக வங்கியில் பணம் இல்லாத போலி காசோலைகளை வழங்கி இந்த பெரிய அளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவில் செயற்பாட்டாளர் பிரதீப் சார்லஸ், ரேணுகா தமயந்தி எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் நகராட்சிமன்ற உறுப்பினரும் அவரது கணவரும் இணைந்தே இந்த கோடி கணக்கான ரூபாய் மோசடியைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மோசடி குறித்து பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நியாயமான தீர்வும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இப்போராட்டத்தின் போது, மோசடிக்கு உள்ளாகி தமது பணத்தை இழந்த வர்த்தகர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததுடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினர்.


