உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல், பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி மற்றும் பெண் தொழிலாளர்களின் நலன் குறித்து வலியுறுத்தல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய நாடுகள் சபையின் 114வது கூட்டத் தொடரின் ஏழாம் நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது, உலக வங்கி இலங்கைக்கு கடந்த காலங்களில் வழங்கியுள்ள நிதி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அண்மையில் ஏற்பட்ட திட்வா புயல் காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்கால உதவித் திட்டங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஆதரவையும் உலக வங்கியிடம் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பெருந்தோட்டத் துறையில் பணிபுரிபவர்களில் சுமார் 80 சதவீதம் பெண்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.