ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பிரதமருடன் அவசர சந்திப்பு: மாகாண ஆளுநர்களின் தன்னிச்சையான இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுப் பிரச்சினைகளுக்கு ஜூன் 30 இற்குள் தீர்வு கிடைக்காவிடின் கடுமையான போராட்டம் என ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று (06) காலை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது.

ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், வலய மட்ட செயல் சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் 3/2 சம்பள முரண்பாட்டு உயர்வை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட 8 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே கொழும்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்களின் பதவி உயர்வுப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பரீட்சை முறைகள் மற்றும் வலய மட்ட செயல் சான்றிதழ் அறிக்கைகளில் நிலவும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாகாண ஆளுநர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் கல்வித்துறையை சீரழித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் அனுமதி இன்றி ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்தின் மூலம் 125 ஆசிரியர்கள் பிழையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.

பாடசாலை மட்டங்களில் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விவகாரங்களில் அதிகாரிகள் எவ்வித தீர்க்கமான முடிவுகளையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் சாடினார்.

எனவே, நடப்பு ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், ஜூன் 30ஆம் திகதியின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ஜோசப் ஸ்டாலின் இதன்போது எச்சரித்தார்.

இக்கலந்துரையாடலில் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.