யாழ்ப்பாண பாடகர் கைது குறித்து நாமல் ராஜபக்ஷ காரசாரம்; அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக சாடல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் மட்டக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் சொல்லிசை (ராப்) பாடல் பாடியதாகக் கூறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் திசைகாட்டி தேசிய மக்கள் சக்தி தரப்பினர் இதே போன்றதொரு பாடலை வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், திசைகாட்டியின் ஜனாதிபதி வேட்பாளர் மேடையில் ஏறி, பிரபாகரனைப் புகழ்ந்து பாடிய பாடலுக்குக் கைகளை அசைத்து நடனமாடியபோது அது அவர்களுக்குச் சரியாகத் தெரிந்ததாகவும், அதற்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயவில்லை என்றும் சாடினார்.
ஆனால் ஒரு சாதாரண இளைஞன் அதனைச் செய்யும்போது மட்டும் சட்டம் பாய்வதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான பாடல்களை உருவாக்கிய, அதற்கு மேடைகளில் கைகளை அசைத்து ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
அதேநேரம் இன்றைய கூட்டத்தில் மாகாண சபை தேர்தலைச் சட்டப்பூர்வமாக நடத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு, இதற்காக வேட்புமனுக்களைத் தயாரிப்பதற்கான பிரத்தியேகக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் கீழ்மட்டக் கிளைகள் மற்றும் அமைப்புகளைப் பலப்படுத்துவதுடன், நாடாளுமன்றத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய சுயாதீனக் குழுக்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு அரசியல் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், கட்சியின் பிரதித் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இரண்டு புதிய பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவாக இருந்தபோதும், தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையால் மக்கள் அதிக விலை கொடுத்து அதனை வாங்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, தரமற்ற நிலக்கரி இறக்குமதியின் மூலம் இடம்பெறும் அநாவசிய நஷ்டங்கள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தங்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததே பொய்களைக் கூறித்தான் என்றும், தற்போது டொலரின் மதிப்பு குறைந்துள்ளதாகக் கூறுவதும் அப்பட்டமான பொய் எனத் தெரிவித்த அவர், டொலரை மற்றும் ரூபாயை நிலையானதாக மாற்றுவதற்கு அரசாங்கத்திடம் முறையான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை என்றும் சாடினார்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள் குறித்துத் தங்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான கவனம் இருக்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

