தனிமையில் வாழும் முதியவர்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் தொடர்பாக பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
Meiveli Media Team

தனிமையில் வாழும் முதியவர்கள் மற்றும் வயோதிப பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் அத்தியாவசியமான பொறுப்பாகும் என இலங்கை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அல்லது வெளிப்பகுதிகளுக்குச் சென்றுள்ளதால், நாட்டில் பல முதியவர்கள் தனிமையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக,அவர்கள் பல்வேறு ஆபத்துகளுக்குள்ளாகும் சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிடும் நோக்கில்இ இவ்வாறான தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை இலக்கு வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொலைகள் கூட அரங்கேறியுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
முதியவர்களின் பாதுகாப்பிற்காகப் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் சிலவற்றை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.முதியவர்கள் வாழும் வீடுகள் தொடர்பாக பொதுமக்கள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் கிடைக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தனிமையில் வாழும் முதியவர்கள் தொடர்பான தகவல்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகப் பொலிஸ் குழுவினருக்கு அறிவித்துஇ அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேவேளை, முதியவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய கைதொலைபேசி ஒன்றினை வழங்கி, அதில் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் பொலிஸாரின் தொலைபேசி இலக்கங்களை வேகமாகத் தொடர்புகொள்ளும் வகையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்களையும் முதியவர்களையும் தனிமைப்படுத்துவதை இயன்றவரை குறைத்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தொடர்ச்சியான அக்கறையுடன் செயற்படுமாறும், ஏற்படக்கூடிய குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

