செம்மணி மனிதப் புதைகுழி: 69 நாட்களில் 272 எலும்புக்கூடுகள் மீட்பு

Meiveli Media Team


யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 69 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வுகளில், 275 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் 272 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 15ஆவது நாளான நேற்று, மேலும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆறு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவற்றில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டு எலும்புக் குவியல்களும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் மட்டும் இதுவரை 34 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக அகழ்வாய்வுப் பணிகளுக்காக அரசாங்கத்தால் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
மே மாதத்தில் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்கும் நோக்கில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் முதலாம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர் தொடர்ந்து புதிய எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின்  மேற்பார்வையில் இந்த அகழ்வாய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள், காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களும் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">