“அனுரவிடம் இருப்பது மொண்டிசூரி மனநிலை; ஐ.எம்.எஃப் பாதையில் செல்ல ரணிலே சிறந்தவர்” – விமல் வீரவங்ச சாடல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் பொதுமக்களின் வாழ்க்கைச் சூழல் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாளத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இன்னும் எரிபொருளால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி, அதன் விலையை மேலும் உயர்த்தவே அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்டார். எமக்கு ஏற்பட்ட உண்மையான பிரச்சினை கடனைச் செலுத்துவதற்குப் போதிய வெளிநாட்டு கையிருப்பு இல்லாததே ஆகும் எனக் சுட்டிக்காட்டிய அவர், இன்று வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்குப் பதிலாக, இருக்கும் டொலர்களையும் அரசாங்கம் அழித்து வருவதாக சாடினார்.

கடன் வாங்குவதன் மூலம் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது எனவும், வேண்டுமானால் வாங்கும் கடனைக் கொண்டு தற்காலிகமாக மூன்று எரிபொருள் கப்பல்களை மாத்திரமே கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை எனக் குறிப்பிட்ட விமல் வீரவங்ச, மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் டொலர்களைக் கொண்டுதான் டட்லி சிறிசேன போன்றவர்கள் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்றும், இருக்கும் டொலர்களைக் கூட அரசாங்கம் பாதுகாப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

வெளிநாட்டு நாணயச் சட்டத்தை மாற்றி, ஈட்டப்படும் டொலர்களையாவது இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டமும் இவர்களிடம் இல்லை எனத் தெரிவித்த அவர், உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகக் கூறினார். பிரீமியம் கட்டணம் மூலம் கொள்ளையடிக்கப்படுவதாக அன்று அநுர குமார திஸாநாயக்க கூறிய போதிலும், அன்று பேசிய அந்த அநுர குமார இப்போது கொள்கையளவில் உயிருடன் இல்லை என அவர் விமர்சித்தார்.

மேலும், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் மக்களுக்குக் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் ஒன்றும் எரிபொருளைக் குடிப்பதோ அல்லது அதனை வைத்து வேடிக்கை பார்ப்பதோ இல்லை என்றும், மரண வீட்டின் நடுவே திருமணக் கொண்டாட்டங்களை நடத்த முடியாது என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கையில் இருக்கும் பணத்திற்கு அமைவாகவே செலவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்து கடன் வாங்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் மீது மீள முடியாத பாரிய சுமை திணிக்கப்படுகிறது என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டின் மக்கள் மாத்திரமன்றி, ஜே.வி.பி என்ற கட்சியும் இன்று அழிந்துபோயுள்ளது என்றும், இது ஜே.வி.பி-யின் உண்மையான கொள்கை அல்ல என்றும் தெரிவித்தார்.

தங்களுக்கு நெருக்கமான நண்பர்களின் கூட்டமைப்பை மாத்திரமே இவர்கள் இன்று திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் பாதையில் செல்வதற்குக் தற்போதைய ஜனாதிபதியை விட ரணில் விக்ரமசிங்கவே ஆகக் சிறந்தவர் என்றும், ஜனாதிபதி அநுர குமார தற்போது ஒரு ‘மொண்டிசூரி’ மனநிலையில்தான் இருக்கிறார் என்றும் கடுமையாக விசனம் தெரிவித்தார். ஐ.எம்.எஃப் பாதையில் செல்லாமலேயே கடனை மறுசீரமைப்பு செய்ய முடியும் எனத் தெரிவித்த அவர், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளைப் பெற்று நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு எம்மால் தீர்வு காண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால அரசியல் கூட்டணிகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமல் வீரவங்ச, தற்போது அரசாங்கம் செல்லும் இதே பாதையில் பயணிப்பதாக இருந்தால், நாங்கள் யாருடனும் இணையப் போவதில்லை என்றும், அவ்வாறான ஒரு பயணத்திற்காக யாரையும் ஆட்சிக்குக் கொண்டுவர நாங்கள் தயாரும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், நாங்கள் காட்டும் சரியான பாதையில் பயணிப்பதாக இருந்தால் மாத்திரமே இணைந்து கூட்டணிகளை அமைக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது ‘சூப்பர் மேன்’களின் காலம் முடிந்துவிட்டது என்றும், தற்போதைய பலவீனமான எதிர்க்கட்சிதான் இந்த அரசாங்கத்திற்கு இருக்கும் மிகப்பெரிய காப்புறுதி என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்களா என வினவப்பட்டதற்கு, அப்படி நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனை நாட்டின் பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பதிலளித்த அவர், எவர் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய இதே தவறான பாதையில்தான் நாடு பயணிக்கப் போகிறது என்றால், அதனால் எவ்வித பயனும் இல்லை எனத் தெரிவித்து தனது ஊடக சந்திப்பை நிறைவு செய்தார்.