“பாடசாலை சுற்றாடல் முன்னோடி தீவுளாவிய சுற்றாடல் வினா-விடைப் போட்டி” ஆரம்பம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பட்டய மனிதவள முகாமைத்துவ நிறுவனத்தின் அனுசரணையுடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பாடசாலை சுற்றாடல் முன்னோடி தீவுளாவிய சுற்றாடல் வினா-விடைப் போட்டி” எதிர்வரும் 2026 ஜூன் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பாடசாலை சுற்றாடல் முன்னோடிகளின் சுற்றுச்சூழல் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து 273 பாடசாலைகளைச் சேர்ந்த தங்கப் பதக்கம் வென்ற சுற்றாடல் முன்னோடிகள் மற்றும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற சுற்றாடல் முன்னோடிகள் என மொத்தம் 2,200 மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியானது மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

இதன் முதலாம் கட்டமாக மாவட்ட மட்டத்தில் எழுத்துப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளதுடன், அதில் அதிக புள்ளிகளைப் பெறும் சுற்றாடல் முன்னோடிகளுக்கு இரண்டாம் கட்டமாக மாகாண மட்டத்தில் வினா-விடை போட்டிகள் நடத்தப்படும்.

அதிலிருந்து மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் சுற்றாடல் முன்னோடிகளுக்கு மூன்றாம் கட்டமாக இறுதி வினா-விடை போட்டி நடத்தப்பட்டு இறுதி வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி இலங்கை பட்டய மனிதவள முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து சுற்றாடல் முன்னோடிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (03) மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை பட்டய மனிதவள முகாமைத்துவ நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி நீல் போகஹலந்த, அதன் தலைமை நிர்வாக அதிகாரி யு. ஏ. சி. ஒபேசேகர மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்விப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.