தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவின் நிலையை விட மோசமான விளைவுகளைச் சந்திக்கும்; சஜித் பிரேமதாச தலைமையில் நாட்டை கட்டியெழுப்ப ஆதரவளிக்கத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் இன்று (03) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
நாட்டின் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்வதாக ஆளுந்தரப்பு அமைச்சர்கள் கூறி வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் எந்தவொரு வாக்குறுதியும் இன்று நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
துறைமுக இறக்குமதி விலையில் எரிபொருளை வழங்க முடியும் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியிருந்த போதிலும், ஆட்சிக்கு வந்த பின்னரே அது எவ்வளவு கடினமானது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இன்று எங்குமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடும், அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையும் நிலவுகின்ற பின்னணியில், சுகாதாரத் துறையை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுவது ஏமாற்று வேலை என்றும், அவ்வாறு ஏதேனும் செய்திருந்தால் அது குறித்து அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார். தற்போது உள்ளூராட்சி அமைப்புகள் முதல் மத்திய அரசாங்கம் வரை முழு அதிகாரமும் தேசிய மக்கள் சக்தியிடமே உள்ளதோடு, 9 மாகாணங்களுக்கும் ஆளுநர்களை நியமித்ததும் தற்போதைய ஜனாதிபதியே ஆவார் எனக் குறிப்பிட்ட அவர், சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகள் மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய போதிலும், தற்போது ஆளுநர்களின் தேவைக்கேற்பவே அவை இயங்குகின்றனவே தவிர மக்களுக்கு எந்தச் சேவையும் கிடைப்பதில்லை என்றார்.
அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கை அளவிடுவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுத்த அவர், இத்தேர்தல் நடத்தப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்திப்பது உறுதி என்றும், தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 3% க்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதாகக் கூறினாலும், விவசாய அமைப்புகளின் ஊடாகவே அதற்கான நிதிகள் திரட்டப்படுவதாகவும், போதைப்பொருள் ஒழிப்பு பற்றிப் பேசும் இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்தில் உள்ள ‘மலர்க்கன்றுகள்’ அனைத்தும் தற்போது ‘களைகளாக’ மாறிவிட்டன என்றும் கின்ஸ் நெல்சன் சாடினார். விவசாயிகளின் அவல நிலை குறித்துப் பேசிய அவர், கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா உர மானியத்தை 30,000 ரூபாவாக உயர்த்தி வழங்குவதாக இந்த அரசு கூறியிருந்த போதிலும், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இதுவரை இந்த மானியம் கிடைக்கவில்லை என்றார்.
நெற்பயிருக்குத் தேவையான நேரத்தில் உரம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு ஏக்கருக்கு 90 கிலோ உரம் தேவைப்படும் நிலையில் அரசாங்கம் 50 கிலோவை மாத்திரமே வழங்குவதாகவும், உலகப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி இரண்டு மூடை உரத்தையே வழங்குகின்ற போதிலும் ஐந்து மூடை உரத்திற்கான பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தற்போது ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 130 ரூபா வரை செலவாகும் பின்னணியில், இடைத்தரகர்களிடம் 95 ரூபாவிற்கே நெல்லை விற்க வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதிகரித்துள்ள எரிபொருள் விலையால் அறுவடைச் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு நேர்ந்ததை விட மோசமான விளைவுகளையே இந்த அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், எவ்வாறாயினும் நாட்டை மீட்டெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் அரசாங்கத்திற்குப் பாரிய ஆதரவை வழங்கத் தயாராக உள்ள போதிலும், நாம் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மறுத்த அவர், அதேநேரம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கட்சி மாறுவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளதாலேயே, கட்சித் தாவலைத் தடுக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்குத் தங்களது 159 பெரும்பான்மை மீது நம்பிக்கையில்லை என்றும், தைரியமிருந்தால் இந்தச் சட்டமூலத்தின் மீது இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு சவால் விடுப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு முறையான திட்டங்கள் இல்லாததால் எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகக் கூறிய அவர், திறமையான அதிகாரிகளின் ஆலோசனைகளை இந்த அனுபவமற்ற, அடாவடித்தனமான ஆட்சியாளர்கள் ஏற்பதில்லை என்றும் சாடினார்.
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கப்படவுள்ளதாகப் பேசப்படுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அவர் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பாடுபட்ட ஒரு திறமையான அதிகாரி என்றும், அவருக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள பயணத்தடைகளை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனினும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவரே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகச் சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதுடன், அதற்கான முழுமையான கட்சி அனுமதியும் கிடைத்துள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் உறுதிபடத் தெரிவித்தார்.

