ஜெனிவா பிரேரணையை நிராகரித்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்-திஸ்ஸ அத்தநாயக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை உதாசீனப்படுத்தக் கூடாது.
பிரேரணைகள் எமக்கு அநாவசிய அழுத்தமாக அமைவதாகக் கூறி , அவற்றை நிராகரித்தால் எதிர்காலத்தில் சர்வதேசத்தின் மத்தியில் இதனை விட கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எனவே யுத்தம் மற்றும் பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணிகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையின் ஊடாக பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இம்முறையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை உதாசீனப்படுத்தக் கூடாது.
காரணம் இது புதிதாக இடம்பெற்ற ஒரு விடயமல்ல. மாறாக ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக வெவ்வேறு தரப்பினரால் இவ்வாறு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுவது வழமையாகவுள்ளது.
இவ்வாறான பிரேரணைகளில் பெருமளவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே வலியுறுத்தப்படும். ஆனால் இம்முறை இதற்கு மேலதிகமாக பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் , அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து சர்வதேசத்திற்கு அதனை நிரூபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதோடு , உள்நாட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் கண்டறிந்து , அவர்களுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாக முன்னெடுத்து , அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும்.
இதன் மூலம் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. மாறாக பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து , உண்மை நிலைமையை தெளிவுபடுத்துமாறே வலியுறுத்துகின்றோம்.
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் இலங்கைக்கு அநாவசியமாக அழுத்தமாகவுள்ளன என்று கூறி , அவற்றை உதாசீனப்படுத்தினால் , அதனை பின்னர் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் தொடர்ச்சியாக பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு , அவை நிறைவேற்றப்படுமாயின் சர்வதேசத்தின் உதவிகள் , ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் தொடர்புகள் கிடையாது. ஆனால் இலங்கை இவ்விரண்டிலுமே அங்கத்துவம் வகிக்கிறது. எனவே இவை உள்ளிட்ட ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது இன்றியமைதாதது என்றார்.