கடன் வழங்குநர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்கலாம் –

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு உதவியளிப்பது குறித்து இலங்கைக்கு கடன் வழங்கியவர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை முதல் நிதிஉறுதிமொழிகள் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாக  மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உத்தரவாதம் மற்றும் விருப்பம் கிடைத்ததும் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்க ஆரம்பிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உத்தரவாதம் உறுதிமொழிகள் சர்வதேச நாணயநிதியம் நிதி வழங்குவதற்கு மிகமுக்கியமான விடயம் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் குறித்த பல தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்ட நடவடிக்கையாக மின்சார கட்டணங்களை அதிகரிப்பது  எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்பு போன்றவற்றை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  இலங்கை மின்சார சபை போன்றவற்றை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்;டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடியின் மத்தியில் இவ்வாறான முடிவுகளை எடுப்பது சமூகத்திற்கு வேதனையளிக்கும் விடயமாக காணப்படும் என்பதை மத்திய வங்கி ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.