கந்தளாய் சீனிபுர காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடிய ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய் சீனிபுர பகுதி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய ஒருவரை இன்று (12) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் சீனிபுர காட்டுப்பகுதிக்குள் நீண்டகாலமாக விலங்குகள் வேட்டையாடப்பட்டு வந்ததாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு பதுங்கிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, நேற்று இரவு சுமார் 100 கிலோ எடையுடைய மானை மூவர் கொண்ட குழுவொன்று துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதுடன், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவேளையில் பதுங்கியிருந்த வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்ற இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து கத்தி, கைத்தொலைபேசி, துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், மேலங்கி மற்றும் 3,850 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று Kantalai Magistrate’s Court இல் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.