ரஷ்யா–உக்ரைன் மூன்று நாள் போர் நிறுத்தம் முடிந்தது: மீண்டும் தாக்குதல்கள் தீவிரம்!

Meiveli Media Team

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததாக கூறப்பட்ட ரஷ்யா–உக்ரைன் இடையிலான மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து, ரஷ்யா மீண்டும் பெரும் அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது.AFP செய்தியின்படி, ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி உக்ரைனின் பல பகுதிகளை தாக்கியுள்ளது. இந்த தாக்குதல்களில் எரிசக்தி வசதிகள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையம் சேதமடைந்துள்ளன. குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “சில நாட்கள் நீடித்த பகுதி அமைதியை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வந்தது” என தெரிவித்துள்ளார். ட்னிப்ரோ(Dnipro),ஜிடோமிர்(Zhytomyr),மைகோலாயிவ்(Mykolaiv),சுமி(Sumy),கார்கிவ்(Kharkiv),செர்னிகிவ்(Chernihiv) உள்ளிட்ட பல பகுதிகளில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் “பதிலடி கொடுக்கும்” என எச்சரித்துள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கையை ரஷ்யாதான் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், மொஸ்கோ மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர வேண்டும் என்றும் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.