கலை மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள்: அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் விசேட கலந்துரையாடல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களுக்கும், அரச காட்சிக் கலை (Visual Arts) உபகுழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (மே 12) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரேமரத்ன தென்னகோன், கலாசார விவகார பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கை கலைச் சபையின் தலைவர் கீர்த்தி வெலிசர்கே, காட்சிக் கலை உபகுழுவின் தலைவர் பிரகீத் ரத்நாயக்க மற்றும் காட்சிக் கலைத் துறையைச் சார்ந்த சிரேஷ்ட கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கலைச் சபைக்கு ஒதுக்கப்படும் அரச நிதியை, அதன் ஒன்பது உபகுழுக்களுக்கும் பகிர்ந்தளிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக மேலதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என கலைச் சபையின் தலைவர் கீர்த்தி வெலிசர்கே சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சுனில் செனவி அவர்கள் ஓவியம், சிற்பம், செதுக்கல் கலை, நிழற்படக் கலை மற்றும் கட்டடக்கலை உள்ளிட்ட காட்சிக் கலையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு காத்திரமான உரையாடலை முன்னெடுத்தார்.

மேலும், தேசிய கலைக்கூடத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துதல், நிழற்படக் கலைக்காக பிரத்யேக தேசிய மத்திய நிலையம் ஒன்றை நிறுவுதல் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள கலாசார நிலையங்களின் வசதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பத்திரிகைத்துறையில் பணியாற்றும் ஓவியர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு, காட்சிக் கலைத் துறையின் எதிர்கால நலன் கருதிப் பல முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எட்டப்பட்டன.