நீதித்துறையின் சுயாதீனத்தை சீர்குலைக்கும் ஜனாதிபதியின் தலையீடு: பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கடும் கண்டனம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நாட்டின் நீதித்துறையின் கௌரவம் மற்றும் சுயாதீனம் தற்போது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை சமூகத்தில் தற்போது எஞ்சியிருக்கும் ஒரு சில கௌரவமான நிறுவனங்களில் நீதித்துறை முதன்மையானது எனச் சுட்டிக்காட்டிய அவர், கட்சி பேதமின்றி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பெரும் சுவராக அது விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், அண்மைக்காலமாக இந்தத் துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நீதித்துறையை எவ்வித அழுத்தங்களுமின்றி பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையினை சுட்டிக்காட்டிய பேராசிரியர், ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு மே 25 அன்று வழங்கப்படும் என்றும், அந்தத் தீர்ப்பை கைதட்டி கௌரவத்துடன் வரவேற்கத் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
நாகரீகமான உலகில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்த விபரங்களை அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாத்திரமே அறிவார் எனவும், அதனை மூன்றாம் தரப்பினருடன் கலந்தாலோசிக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் பேராசிரியர் விளக்கினார்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ள நிலையில், தற்போது நீதிபதிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்தே இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செயற்பாடானது நீதித்துறையின் சுயாதீனம் குறித்து அரசியலமைப்பின் 15 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் கொள்கைகளையும் மீறும் செயலாக அமைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஒரு நாட்டில் வாழும் செல்வந்தர் முதல் ஏழை வரை அனைவரும் தமக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையையாவது கொண்டிருக்க வேண்டும் என்றும், அது இல்லாத சமூகத்தில் ஜனநாயகம் நிலவ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறை விவகாரங்களில் முறையற்ற விதத்தில் தலையிடுவது இலங்கை அரசியலமைப்பின் 111 (C) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரஜாவுரிமை இழப்பு போன்ற தண்டனைகளுக்குரிய பாரிய குற்றமாகும். இந்த விவகாரத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து கௌரவ பிரதம நீதியரசருக்குப் பதிவுத் தபால் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதன் பிரதிகளை சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

