பணத்திற்கு விலைபோகும் சிறைச்சாலை அதிகாரிகள், தாக்குதல் நடத்த அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு
கடந்த 9ஆம் திகதி கொழும்பு தடுப்புக் காவல் சிறையில், பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் முன்னிலையில், கைதி ஒருவர், சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதேஷ் நந்திமால் சில்வா, கடந்த காலத்தில் பணத்திற்காக ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமைக்கான பல உதாரணங்களை சுட்டிக்காட்டியதோடு, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமும் அவ்வாறான ஒரு சம்பவமா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சித்திரவதைகள் குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் பேசியுள்ளோம். எனினும் கடந்த 9ஆம் திகதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மஹிந்த குமார திலகரத்ன என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த கைதி விசேட பாதுகாப்புடன் தடத்து வைக்கப்பட்டுள்ளர். மஹிந்த குமார வேறுவொரு கைதியினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். விசேட பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதிக்கு இவ்வாறு எப்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என நாம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கேட்க விரும்புகின்றோம். பிரதான சிறைச்சாலை அதிகாரியும், வேறு இரு அதிகாரிகளும் சிறையில் இருந்து குறித்த கைதியை வெளியில் எடுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தாக்குதலை மேற்கொண்ட கைதியும் அருகில் இருந்துள்ளார். குறித்த பிரதான சிறைச்சாலை அதிகாரியும், வேறு இரு அதிகாரிகளும் அருகில் இருந்த சமயத்தில்தான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல், பராமரிப்பு, புனர்வாழ்வு என்பதே சிறைச்சாலைகளின் அடிப்படை கொள்கைகளாக காணப்படுகின்றன. எனினும் இவை எதுவும் சிறைச்சாலைகளில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்குமானால் மஹிந்த குமார திலகரத்ன தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கமாட்டார். கடந்த காலங்களில் ஒப்பந்தங்களுக்கு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை நாம் அறிவோம். ஆகவே குறித்த பிரதான சிறைச்சாலை அதிகாரியும் இந்த தாக்குதலுடன் தொடர்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தகவர்களின் பெயரை குறிப்பிட்டு பணத்தை வழங்கியதும் வலைந்து கொடுக்கும் சில அதிகாரிகள் சிறைச்சாலையில் இருப்பதை நாம் அறிவோம். இந்த குறித்த சிறைச்சாலை அதிகாரியும் அவ்வாறான ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அவர் இருக்கும்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.என்றார்.
ஆகவே கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரிகளே இன்று அவர்ளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், ஆகவே குறித்த அந்த ஒருசில அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் கோரிக்கை விடுத்துள்ளார்.