தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல்.விஜய்யுடன் சேர்ந்ததால் அடுத்தடுத்து ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகிகள்
Meiveli Media Team

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அதிரடியாக ராஜினாமா செய்து வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. ஆனால், இந்த முடிவானது கொள்கை ரீதியானது அல்ல என்றும், வெறும் அதிகாரப் பசிக்காக எடுக்கப்பட்ட ‘சந்தர்ப்பவாத முடிவு’ என்றும் கூறி காங்கிரஸ் கட்சியினரிடையே புகைச்சல் கிளம்பியுள்ளது.
இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இந்திய தேசிய மாணவர் யூனியன் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் நிபுணர்கள் பிரிவு நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர்கள் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தேர்தலுக்கு முன்பே தவெக-வுடன் ரகசியமாக இணைந்து பணியாற்றியது மற்றும் தற்போது ஆட்சியில் பங்கு பெறுவதற்காகக் கூட்டணி அமைத்தது போன்ற செயல்கள் கட்சியின் அடிப்படைத் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகளின் விலகல், அக்கட்சியின் மேலிடத்தை நிலைகுலையச் செய்துள்ளது. தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்த சில மணி நேரங்களிலேயே ஏற்பட்டுள்ள இந்த விரிசல், தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது

