சாட்சிகளின் மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்று (08) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, அரச திறைசேரியின் நிதி காணாமல் போனமை மற்றும் சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசாங்கம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரச திறைசேரியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் சில கீழ்மட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், இந்தச் சம்பவம் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷ எனும் அதிகாரி உயிரிழந்துள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த அதிகாரி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த அவர்,
திறைசேரி மோசடியை மூடிமறைப்பதற்காக ஏதேனும் ஒரு தரப்பினர் அவரைப் படுகொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதால், இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இதற்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில்களை வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பிரதான சாட்சியாளராக இருந்த கபில சந்திரசேனவும் தற்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டிய இவ்வாறான நபர்கள் தொடர்ந்து உயிரிழப்பது திட்டமிட்ட கொலைகளா என்ற கேள்வி எழுவதாகவும் சுஜித் சஞ்சய பெரேரா சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய நபர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பதானது, நீதித்துறை மீது அரசியல் செல்வாக்கு செலுத்தப்படுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்காது என்ற பயம் ஏற்பட்டு, அவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படலாம் அல்லது மர்மமான முறையில் கொலை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். கபில சந்திரசேன போன்றவர்களுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கமே வழக்குகளைத் தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த மோசடிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக 2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷவினரை ஆட்சிக்குக் கொண்டு வர தற்போதைய அமைச்சர்களும் பங்களித்திருந்தனர் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதில் அரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் இருக்குமானால், இது போன்ற மர்ம மரணங்களைத் தடுத்து சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா மேலும் தெரிவித்தார்.

