‘வரலாற்றை மாற்றியவன்’ – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு “கம்பன் புகழ்” விருது வழங்கி கௌரவம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் ஆண்டுதோறும் வழங்கி வரும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருது, 2026ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நடைபெற்ற கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவத்தில், “வரலாற்றை மாற்றியவன்” என்ற புகழாரத்தோடு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் அரவணைத்து நாட்டை நிர்வகித்து வரும் அவரது பணிகளைப் பாராட்டும் வகையில் இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

தொழிலதிபர் என்.எஸ். வாசு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த இந்த விழாவிற்கு நீதியரசர் பா. சசி மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த உலகப்புகழ் பெற்ற வைத்தியர் டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையினை ஆற்றினார்.

இந்த விழாவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுடன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆறு சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி. தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி. உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்திய கலாநிதி ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு விருது பெற்றனர்.

தனிப்பட்ட காரணங்களால் நிகழ்வுக்கு வருகை தராத முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கான விருதினை, அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்க விழா மேடையில் பெற்றுக்கொண்டார். கலை மற்றும் கலாசார விழுமியங்களை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டமை விழாவிற்கு கூடுதல் சிறப்பினைச் சேர்த்தது. இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முக்கிய தளமாக அமைந்தது.