“மக்களின் வரிப்பணத்தில் அரசியல் கொண்டாட்டங்கள்” – பிரதீப் சார்ல்ஸ் கடும் சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அபிமானி ஜனஜய கட்சியின் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் (03) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் பிரதீப் சார்ல்ஸ், கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரித்ததற்கு உலகப் போர் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் முறையற்ற நிர்வாகம் மற்றும் ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைகளில் இடம்பெற்ற குளறுபடிகளே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
முதலாம் திகதி அதிகரிக்கப்பட வேண்டிய விலையை, ஜனாதிபதி நுவரெலியா சென்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தற்காலிகமாக மறைத்து வைத்ததாகவும், இவ்வாறான ஏமாற்று வேலைகளைச் செய்ய வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய பொருளாதார அழுத்தங்களால் விவசாயிகள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், டீசல் விலையில் பாரத்தை ஏற்றமாட்டோம் என்று கூறிவிட்டு பெட்ரோல் விலையை பாரியளவில் அதிகரித்து மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், கொழும்பில் இருந்து பஸ்கள் மூலம் மக்களை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்றமை மற்றும் ஜனாதிபதி ஹெலிகொப்டரில் பயணம் செய்தமை போன்ற நடவடிக்கைகள் மக்களின் வரிப்பணத்திலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதீப் சார்ல்ஸ் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கட்சியின் முக்கிய உறுப்பினரான ரவீந்திர நிஸ்சங்க, ஜனாதிபதி முதலாம் திகதி மக்களுக்கு ஒரு விசித்திரமான ‘பரிசை’ வழங்கியதாகத் தெரிவித்தார். ஒரு நாள் மட்டும் எரிபொருள் விலை உயர்வை நிறுத்தி வைத்துவிட்டு, அடுத்த நாளே விலையை அதிகரித்தமையானது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் விமர்சித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் பஸ்கள் மூலம் ஆட்களைத் திரட்டி நுவரெலியாவில் பாரிய கூட்டங்களை நடத்திவிட்டு, இப்போது அதன் சுமையை மக்கள் மீது சுமத்துவது முறையற்றது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

