இலங்கை திரும்ப விரும்பும் அனைத்து அகதிகளுக்காக  இந்திய துணை ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த தமிழரசுக்கட்சி

Meiveli Media Team

இலங்கை திரும்ப விரும்பும் அனைத்து அகதிகளுக்கும் இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய துணை ஜனாதிபதி இராதா கிருஷ்ணனிடத்தில் எழுத்துமூலம் கோரியுள்ளது. மயிலாடுதுறை ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக இந்தியாவில் 25வருடங்களாக வாழ்ந்து வரும் 37 வயதான இளைஞர் ஒருவர் தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வரும் தான், உரிய ஆவணங்கள் மற்றும் உரிமைகள் இன்றி அநாதை போல வாழ்வதாகவும், தன் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பவதாகவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை சுமார் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்,  விரக்தியில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் குறிப்பிட்ட அவரை மயிலாடுதுறை ஆட்சி அலுவலர் அலுவலகத்தைச் சூழ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்துச் சென்று மனுவை கைளிப்பதற்கு உதவியளித்தனர்.

இந்த விடயம் சம்பந்தமான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சி அவ்விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொண்டதோடு உடனடியாக இந்திய துணை ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஏம்.ஏ.சுமந்திரனால் ‘இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள்’ எனும் தலைப்பில்  கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்ட டுள்ளது. எம்மோடு உரையாடுவதற்காக உங்களது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக முதற்கண் நன்றி செலுத்துகின்றோம். இச்சந்திப்பில் இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் அகதிகளின் மீள் வருகை சம்பந்தமாக தாங்கள் சொன்ன ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நாம் நன்றி சொல்ல விரும்புகின்றோம். இக்கடிதத்தோடு இணைத்திருக்கும் காணொளிச் செய்தியில் அப்படியாகத் திரும்பி வரவிரும்பும் ஒரு இளைஞன் நேற்று செய்த போராட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசிக்கொண்டதற்கு இணங்க குறித்த இளைஞனது மீள்வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களை துரிதமாக நிறைவேற்றும்படி குறித்த நிர்வாகிகளைப் பணிக்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.அதேவேளையில் இவரைப் போல திரும்பிவர விரும்பும் அனைவருக்கும் உங்களது அரசு தரப்பிலே செய்யவேண்டியவற்றை துரிதப்படுத்துமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.