உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு
Meiveli Media Team

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றுள்ளன. இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெற்றது.
இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்ப்டது. மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெற்றது. இதனிடையே, ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடைந்தது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.ஐஎஸ்ஐஎஸ்உடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதக் குழுவினால் நடத்தப்பட்ட இத்தாக்குதல், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

