இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளியின் வீடு இன்று நண்பகல் காடையர் கும்பலால் இடிப்பு: தாக்குதலில் ஒருவர் படுகாயம் – குற்றவாளிகளைப் பிடிக்க விசேட குழு அமைப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இரத்தினபுரி, காவத்தை, நீலகம (01) தோட்டப்பகுதியில் தொழிலாளி ஒருவரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று, இன்று நண்பகல் வேளையில் இனந்தெரியாத வன்முறை கும்பலால் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

கறுப்பு நிற ஆடைகளை அணிந்து, தலைக்கவசங்களினால் முகங்களை மறைத்தவாறு வந்த இக்குழுவினர், வாள்கள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளைக் கொண்டு அங்கிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

இக்கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கறுப்பு ஆடை அணிந்து வந்த வன்முறை கும்பலின் இச்செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த அராஜகச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, அவர்களைப் பிடிப்பதற்காக தற்போது விசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், குறித்த வீடு சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்து, அது தொடர்பாக ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.