ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 5 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது
ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதா கூறி ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் நீர்கொழும்பில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Global migration Lanka (pvt) Ltd என்ற பெயரில் போலி நிறுவனம் ஒன்றை நடத்தி கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து ஐந்து கோடி ரூபாய்க்கும் மேலாகமாக பண மோசடி செய்த பெண் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவு பொலிசார் நேற்று 17 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
நுகேகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே நீர்க்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய விசேட மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து விசாரணையின் பின்னர் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 50 இலட்சம் முதல் 70 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நீர்கொழும்பு நகரில் ஆறு பேர் இதுவரை இவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, நாட்டின் பல பிரதேசங்களிலும் வாடகைக்கு பெற்ற வீடுகளில் இருந்து சந்தேக நபர் இவ்வாறு பண மோசடி செய்துள்ளதாகவும் மிரிஹான மற்றும் மாரவில பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பெண்ணிடம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இந்த பெண்ணிடம் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் இது சம்பந்தமான ஆதாரங்களுடன் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபரான பெண் நேற்று நீர்கொழும்பு மேலதிக நீதிவான் பமில ஜெயசூரிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவன் உத்தரவிட்டார்.