பலாங்கொடையில் இருந்து கண்டி சென்ற கார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒருவர் பலி; மூவர் படுகாயம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் இன்று (17-04-2026) காலை 8.00 மணியளவில் கோர விபத்துக்குள்ளானது.
வேகமாகப் பயணித்த கார், குறித்த பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் பாய்ந்து அங்குள்ள கெசல்கமுவ ஒயாவில் (ஆற்றில்) வீழ்ந்து முற்றாக நசுங்கியது.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் அதற்கான காரணம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

