நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது: புதிய யுகத்திற்கான மாற்றம் அவசியம் – வஜிர அபேவர்தன எச்சரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நேற்று (15) காலி, உழுவிட்டிகே பகுதியில் அமைந்துள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

சிங்கள – தமிழ் புத்தாண்டு கலாசார விழுமியங்களை மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்தாவது நிறைவேற்றியுள்ளமை பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் கலாசார மற்றும் மத விவகாரங்களில் அக்கறையின்றி செயற்பட்டாலும், மக்கள் தங்களின் மரபுகளை எவ்வித அழுத்தங்களுக்கு மத்தியிலும் பாதுகாப்பார்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகக் கூறினார். நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வாகனப் போக்குவரத்துகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 94 டொலர் வரை குறைந்துள்ள போதிலும், விலைச்சூத்திரத்தின் பலனை மக்களுக்கு வழங்க அரசாங்கம் முன்வரவில்லை. யுத்தம் என்ற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நாட்டை மீட்டெடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் போன்ற காத்திரமான சட்டங்கள் தற்போது முழுமையாக மீறப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களின் கீழ் இனி நாட்டை மாற்றியமைக்க முடியாது என்பதால், 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியை விடவும் பாரியதொரு புதிய யுக மாற்றம் இலங்கைக்கு அவசியமாகியுள்ளது. பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், 1977 இல் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே இன்று மக்கள் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் நவீன ஊடக வசதிகளை அனுபவித்து வருவதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது டொலர் ஒன்றின் மதிப்பு கறுப்புச் சந்தையில் 450 – 500 ரூபாவாகக் காணப்பட்டது. அவர் அதனை 290 ரூபா வரை குறைத்து நாட்டை ஒப்படைத்தார்.

ஆனால் இன்று டொலரின் மதிப்பு மீண்டும் 320 ரூபாவை நெருங்கியுள்ளது. டொலரின் மதிப்பு ஒரு ரூபாவால் அதிகரிக்கும் போது நாட்டின் கடன் சுமை 37 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கிறது. இவ்வாறு கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றால் நாடு மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறும் அபாயம் உள்ளதாக வஜிர அபேவர்தன எச்சரித்தார். 50 வருட அரசியல் அனுபவமும் சர்வதேசத் தொடர்புகளும் கொண்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பழைய தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கம் தனது தவறுகளை நியாயப்படுத்த முடியாது என்றார். கொள்முதல் செயல்முறைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு வெளிப்படையான ஜனநாயக முறைமை நாட்டுக்கு அவசியம் எனத் தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு மற்றும் விவசாய சமிதி தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தங்களது எதிர்ப்பைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், சரியான நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் தெரிவித்தார்.