அயன் பட பாணியில் ஆடைகளுக்குள் மறைத்து 383 கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI
சூர்யா நடித்த ‘அயன்’ திரைப்படப் பாணியில், நூதனமான முறையில் தமது உடல் மற்றும் ஆடைகளுக்குள் பெருமளவிலான இலத்திரனியல் சாதனங்களை மறைத்து வைத்து இலங்கைக்குள் நுழைய முயன்ற ஒன்பது சீனப் பிரஜைகள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து பாரிய அளவிலான இணைய வழி நிதி மோசடிகளை (Online Financial Scams) முன்னெடுக்கும் நோக்கில் இந்தச் சாதனங்களைக் கொண்டு வந்திருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை விமான நிலையம் வந்திறங்கிய இந்த ஒன்பது சீனப் பிரஜைகளின் உடல் அசைவுகள் மற்றும் நடத்தையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவர்களை விசேட சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்குள்ளும், உடலோடு ஒட்டியவாறும் மிகவும் சூட்சுமமான முறையில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 383 கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த இலத்திரனியல் சாதனங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து சர்வதேச ரீதியிலான இணைய மோசடிகளில் ஈடுபடும் சீனப் பிரஜைகள் பொலிஸாரால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குழுவாக வந்து, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொலைபேசிகளைக் கடத்தி வர முயற்சித்தமையானது, இலங்கையில் சட்டவிரோத அழைப்பு நிலையங்களை அல்லது நிதி மோசடி மையங்களை அமைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது சுங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களுக்கு இலங்கையில் உள்ளூர் தொடர்புகள் எவையேனும் உள்ளனவா என்பது குறித்தும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

