பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முறைப்பாடு
இலங்கையில் சாதாரண பொதுமக்களுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தான் அவ்வாறான ஒரு சம்பவத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள யூத் போர் ஷேஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர, எதிர்காலத்தில் வேறு எவருக்கும் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானும் எனது நண்பரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் என்னை கைது செய்தனர். என்னை கைது செய்தமைக்கான காரணத்தை தெரிவிக்காமல் என்னை அவர்கள் கைது செய்து வாகனத்திற்குள் தள்ளிய அவர்கள் என்னுடைய கைத்தொலைபேசி உள்ளிட்ட உடைமைகளை கோரினர். நான் அவற்றை வழங்க மறுத்தேன். என்மீது தாக்குதல் நடத்தியதோடு, மரண அச்சுறுத்தல் விடுத்தனர். அவர்கள் முடியுமானால் என்னை கொலையும் செய்திருக்க முடியும். கடந்த காலங்களில் பொலிஸாரால் பொது மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே நாம் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். எங்களால் முடிந்த அனைத்த விடயங்களையும் முன்னெடுத்து இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்போம்.என்றார்.
கடந்த காலங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் குறித்த அனைவர் சார்பாகவுமே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக யூத் போர் ஷேஞ்ச் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.