இலங்கை தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிற்கு தமிழர்கள் நன்றி தெரிவிப்பு
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டராலினுக்கு பயனாளிகளான இலங்கை தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்ராலின் தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இதன்பிரகாரம் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் 17.17 கோடி ரூபா மதிப்பில் கடந்த 8 மாதங்களில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு அதன் பணிகள் முழுமையாக முடிவடைந்தன.இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த முகாமில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி, குளியலறை, பூங்கா, சமுதாய கூடம், மைதானம், சாலைகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.