மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் காவல்துறை அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் நேற்ற கையளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் குருநாகலில் அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி அவரைக் கொல்ல திட்டமிட்டதாக காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் குற்றம் சுமத்தினார்.
முன்னதாக, நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின்படி நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை கையளித்த நீதிபதி, அவர்களின் கைரேகைகளை எடுத்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்ததுடன், தமது தரப்பினர் 13 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, தமது கட்சிக்காரர்களுக்கு பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர்கள் 13 வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை தனித்துவமான விடயமாகக் கருதி, பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் ஜாமீன் கோரிக்கை மீதான உத்தரவை ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், வழக்கை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.